Sunday 19 July 2015

1200 அரசுப் பள்ளிகளை மூட முடிவு: ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு.

தமிழக முழுவதும் 1,200 அரசுப் பள்ளிகளை மூடுவது என தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலக்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் மோசஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களுக்கான கலந்தாய் வை தமிழக அரசு ஓராண்டு என்பதற்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று அறிவித்துள்ளது. இதனை கைவிட்டு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வுக் கூட்டங் களை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஜேக்டோ மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இது ஒளிவுமறை வற்ற கலந்தாய்வாக அமைய வேண்டும்.
ஆங்கில வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் எங்கே?
ஆங்கில வழிக்கல்வி முறை துவக்கப்பள்ளிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவில்லை. அரசு தமிழ்வழிக்கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை மூட அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது. கூடுதலான மாணவர் வருகையை உறுதிப்படுத்திட அரசு தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திட்டமிட்ட சதி
மாநிலம் முழுவதும் 1200 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவெடுத்துள்ளது. அரசு பள்ளிகள் இயங்காமல் இருக்க தனியார் பள்ளிகளுக்கும், சுயநிதி பள்ளிகளுக்கும் அரசு ஊக்கமளித்து வருகிறது. அரசு பள்ளிகளை இழுத்து மூட இது ஒரு திட்டமிட்ட சதியாக நாங்கள் பார்க்கிறோம். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் அரசு உதவவில்லை. ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் 5க்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகளுக்கு அனுமதி வழங்குகிறது அரசு. அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்திற்கு மாறாக ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதத்தை அமலாக்குகிறது. இதனால் கல்வியின் தரம் குறைகிறது.
ஆசிரியர்களிடம் பேசாத அதிமுக அரசு
தேர்தல் வாக்குறுதியை அதிமுக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம், தீர்வு காணுவோம் என்று கூறியிருந்தது. மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் அனுமதியை ரத்து செய்வோம் என்று கூறியது. ஆனால் அதிமுகவின் ஆட்சி நிறைவடைகிற தருவாயில் உள்ளது. இதுவரை ஆசிரியர்களை அழைத்துப் பேசவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜேக்டோவின் சார்பில் சென்னையில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 2-அன்று அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் எங்களது சங்கம் முழுமையாக பங்கேற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநிலப் பொதுச் செயலாளர் சே.பாலசுப்ரமணி, பொருளாளர் ஜீவானந்தம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் அமல்ராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments: