Wednesday 6 May 2015

தேசிய தடகளம் தமிழக அணி பதக்கம் குவிப்பு . . .

19–வது பெடரேசன் கோப்பை தடகளப் போட்டி கர்நாடக மாநிலம் மங்களூரில் மே 1 முதல் 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில், பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை எல். சூர்யா 34 நிமிடம் 42.05 வினாடிகளில் கடந்து இரண்டாவது தங்கத்தை வென்றுகொடுத்தார். ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாட்டின் லட்சுமணன் தங்கத்தை கைப்பற்றினார்.100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 13.67 வினாடியில் கடந்த தமிழக வீராங்கனை ஜி.காயத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.மற்றொரு வீராங்கனை தீபிகாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 400 மீட்டர் ஓட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு தங்கம் கிடைத்தது. ஓட்டப் பந்தயங்களில் 123.5 புள்ளிகள் பெற்ற ராணுவம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தமிழ்நாடு 114 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தை பிடித்தது.நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த தொடரின் ஈட்டி எறிதலில் ராணுவ வீரர் தேவேந்திர சிங் 79.65 மீட்டருக்கு எறிந்து புதிய சாதனை படைத்தார்.அதேபோல், குண்டு எறிதல் போட்டியில் அரியானா வீரர் இந்தர்ஜித் சிங் 20.65 மீட்டர் தூரத்திற்கு எறிந்து சாதனை நிகழ்த்தினார். 19 வயது இளம் வீராங்கனை ஜெய்ஷா, மாரத்தான் போட்டியில் 2 மணி 37 நிமிடங்கள் 29 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வரலாற்று சாதனையை படைத்தார்.இதற்கு முன்பு சென்னையில் 1995ம் ஆண்டில் நடைபெற்ற தெற்கு ஆசிய பெடரேசன் கோப்பையின் போது சத்தியபாமா 2 மணி 38 நிமிடம் 10 வினாடிகளே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஜெய்ஷா முறியடித்தார். ஒட்டுமொத்தமாக கர்நாடக அணி 84.500 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. 68.500 புள்ளிகளை எடுத்த ராணுவ அணிக்கு 2வது இடமும், 68 புள்ளிகளுடன் கேரளா 3 வது இடமும், 53 புள்ளிகள் பெற்ற தமிழ்நாடு 4வது இடத்தையும் பிடித்தன.

No comments: