Saturday 23 May 2015

மூடுவிழா நடத்தத் துடிக்கும் அரசு; பின்வாங்கச் செய்யும் மாணவர்கள்!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம், பரணம் என்ற ஊரில், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர் எஸ்.பாரதிராஜா, பட்டுக்கோட்டை, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி வைஷ்ணவி, திருவாரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி ருஷிதா, சேலம், வாழப்பாடி அரசு பெண் கள் மேல் நிலைப்பள்ளி மாணவி ஜெயநந்தினி ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.அரசுப்பள்ளிகளில் படித்த 19 மாணவர்கள், முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளமாணவ, மாணவிகளில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மாநில அளவில், தேர்வு எழுதியவர்களில் 92.2 சதவீதமாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் 92.13 சதவீதமும், நகராட்சிப் பள்ளிகளில் 89.22 சதவீதமும், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 87.51 சதவீதமும், அரசுப்பள்ளிகளில் 89.23 சதவீதமும் மாணவ - மாணவிகள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும் ஆரவாரத்துடன், பொருட்செலவுடன் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முடிவாக இது அமைந்துள்ளது.அதேபோல் அரசுப்பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தி வருகின்ற தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த தேர்வு முடிவுகள் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பணியாற்றியதற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது. இதுவும் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். கல்வியை தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிக்கு இத்தேர்வு முடிவுகள் ஒரு தடைக்கல்லாக அமையும் . அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவும். தமிழகம் முழுவதும் 31,173 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1,24,000 ஆசிரியர்கள் உள்ளனர். 28.4 லட்சம்மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.போதுமான எண்ணிக்கையில் சேர்க்கையில்லை என்று சொல்லி 2000 பள்ளிகளை மூட அரசுஉத்தேசித்து வருகிறது. தற்போது 11000 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர் வசந்தி தேவி குறிப்பிடுகையில், அரசுப்பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், இவ்வாறு அமல்படுத்துவதின் மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில், கட்டணக் கொள்ளைகள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளன. முறையான ஊதியம் தரப்படாமல், தொகுப் பூதியத்தை பெற்றுக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இடவசதியின்றி மரத்தடியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் ஏராளம் உண்டு.அரசுப் பள்ளிகளை கேவலப்படுத்தும் நோக்கத்துடன், சிற்சில சம்பவங்களை பொதுவாக்கி ஆசிரியர்கள் மீது தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இத்தனை சோதனை களையும் கடந்து ஆசிரியர்கள் தங்களின் இடைவிடாத முயற்சிகளின் மூலமாக அரசுப்பள்ளிகளில் குறிப்பிடத்தக்க தேர்ச்சி விகிதத்தை எட்டி இன்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்!-

No comments: