Thursday 2 April 2015

பிரதமருக்கு... மரணப் படுக்கையில் ஓர் உருக்கமான கடிதம்.

மரணப் படுக்கையில், கடைசி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்த சுனிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் இப்போது துடிப்புடன் இணையத்தில் உலா வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகதான் அவர் அந்தக் கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதினார்.
யார் இந்த சுனிதா?
நீங்கள் திரையரங்கு சென்று சினிமா பார்ப்பவர் என்றால் நிச்சயம் சுனிதா உங்களுக்கு பரிச்சியமானவரே. பெரும்பாலான திரையரங்குகளில் சுனிதா தோன்றும் புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான அந்த விழிப்புணர்வு விளம்பரத்தை பார்க்க முடியும்.'புகையிலை என் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது' என சுனிதா தனது வாக்குமூலத்தை அதில் பதிவு செய்திருப்பார்.என்ன காரணம்?சரி, மரணப்படுக்கையில் சுனிதா அத்துனை வேதனைக்கு இடையேயும் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும்? இதோ அதற்கான விடை.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவை எடுத்தது.அதன்படி சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது 40% அளவுக்கு அச்சிடப்படும் எச்சரிக்கை படம் 85% பெரிதாக்கப்படவேண்டும். மத்திய சுகாதாரத்துறையின் இந்த முடிவு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.ஆனால், சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவை ஆய்வு செய்த பாராதிய ஜனதா எம்.பி. திலீப்காந்தி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதார அமைச்சருக்கு அனுப்பிய ஓர் அறிக்கையே இதற்குக் காரணம்.
அறிக்கையில் இருந்தது என்ன?
"இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆராய்ச்சியும், புகையிலைப் பொருட்களால் புற்றுநோய் வரும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. வெளிநாடுகளின் 2 ஆய்வுகள்தான் அப்படி கூறுகின்றன. புகையிலையின் காரணமாக மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை.இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தவேண்டியுள்ளது. மேலும் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இத்தொழிலின் வருவாய் ஆகியவற்றின் மீது ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டி இருக்கிறது.
எனவே எச்சரிக்கை செய்யும் படங்களை பெரிய அளவில் சிகரெட், புகையிலை பாக்கெட்டுகளில் அச்சிடவேண்டும் என்கிற முடிவை சுகாதார அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த நாடாளுமன்ற குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் 8 பேர் பாஜக எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனிதாவின் கடைசி வேண்டுகோள்:
"குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் முதல் பிரதமர் நீங்கள். அதனால்தான் உங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். நம் தேசத்தில் புகையிலை பயன்படுத்துவோரில் படிப்பறிவு இல்லாதோர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய புகைப்பட எச்சரிக்கை மிகவும் உபயோகமாக இருக்கும். எனவே, இந்த நடைமுறைக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோருகிறேன்."இதுவே பிரதமர் மோடிக்கு சுனிதா முன்வைத்துள்ள கடைசி வேண்டுகோள்.
புகையிலை பயன்பாட்டால் தனது உயிரை இழந்த சுனிதா, மரணப் படுக்கையில் பிரதமருக்கு எழுதிய கடைசிக் கடிதம் தாக்கத்தை ஏற்படுத்துமா? பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
சுனிதா தோமர்... புற்றுநோய் இவரது உயிரை இன்று (புதன்கிழமை) அதிகாலை காவு வாங்கிவிட்டது

No comments: