Thursday 4 December 2014

நிரஞ்சன் ஜோதியை நீடிக்க அனுமதிக்ககூடாது - எதிர்க்கட்சி

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் அமளி ஏற்பட்டது.குறிப்பாக, "அவதூறாக பேசிய ஒருவரை மத்திய அமைச்சராக நீடிப்பதற்கு பிரதமர் மோடி எப்படி அனுமதிக்கிறார்? என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.மேலும், இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் எனவும், அமைச்சர் நிரஞ்சன் ஜோதி பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.டெல்லியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசும்போது. “ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்யவேண்டும்என்றார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் நிரஞ்சன் ஜோதி பேசும்போது, அவைக்கு வெளியே நான் தெரிவித்த கருத்துகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். அவை விரும்பினால் மன்னிப்பு கோரவும் தயாராக இருக்கிறேன்என்றார்.இருப்பினும் அவையில் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சாத்வி சர்ச்சைக் கருத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. சாத்வி நிரஞ்சன் ஜோதி பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.மக்களவை இன்று காலை கூடியவுடன், சர்ச்சைக் கருத்தை தெரிவித்ததற்காக அமைச்சர் நிரஞ்சன் ஜோதி பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.முதலில் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிரஞ்சன் ஜோதி தனது சர்ச்சைக் கருத்துக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். பிரதமர் அவையில் இருப்பதால், அவரே இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியினருடன் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களும் இணைந்து கொண்டனர். அவையிம் மையப் பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். நிரஞ்சன் ஜோதி மீது எப்..ஆர். பதிவு செய்யுமாறு வலியுறுத்தினர்.அவையில் அமளி நடந்து கொண்டிருந்தபோது, பிரதமர் மோடி கோப்புகள் சிலவற்றில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். அவையில் கூச்சல், குழப்பம் நீடிக்கவே அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளி ஏற்பட்டது. தொடர் அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை இரண்டாவது நாளாக நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

No comments: