Wednesday 5 November 2014

உமக்கெதற்கு பத்திரிகையாளர் பென்ஷன்-ஐ.மா.பா-சோகம்

மதுரை மக்களால் ஐமாபா என்றழைக்கப்படும் 98 வயது தியாகி ஐயா .மாயாண்டி பாரதியை கடந்த வாரம் மதுரை போன போது அவசியம் பார்க்கவேண்டும் என்று போயிருந்தேன்.மதுரை மேலமாசிவீதி காக்காதோப்பு தெருவில் உள்ள பாரதமாதா இல்லம் என்ற அவரது வீட்டில் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறிய அறையில் நைந்து போன பொருட்களுக்கு நடுவில் அவரும் நைந்து போய் கட்டிலில் கிடந்தார்.தெரியாதவர்களுக்காக அவரைப்பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்.
மதுரையில் பிறந்தவர் பதினைந்து வயதிலேயே விடுதலைப்போரில் ஈடுபட்டவர். சட்டமறுப்பு, கள்ளுக்கடை அந்நிய ஜவுளிக்கடை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர்.கம்பெனியை கலக்கிய கட்டபொம்மன், படுகளத்தில் பாரததேவி என்பது போன்ற நூல்களை எழுதியதற்காக சென்னை சிறையிலடைக் கப்பட்டவர்.சுதந்திரத்திற்கு பிறகு சுயராஜ்யம் வந்தது ஆனால் நம் மக்களுக்கான சுகராஜ்யம் எப்போது வரும் என்று கேட்டு போராடியதன் காரணமாக மீண்டும் தண்டனை விதிக்கப்பட்டவர்.இப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காக மதுரை, திருச்சி, வேலூர், கோயமுத்தூர், சென்னை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, கடலூர் மற்றும் தஞ்சாவூர் சிறைகளில் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தவர்.சிறையில் இருந்த காலத்தில் எல்லாம் நிறைய படிப்பதையும் எழுதுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.லோகசக்தி, பாரத சக்தி துவங்கி தீக்கதிர் வரையிலான பல்வேறு பத்திரிகைகளில் சுமார் ஐம்பது ஆண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார்.காமராசர் முதல் நல்லகண்ணு வரை இவருக்கு தெரியாதவர்கள் யாரும் கிடையாது இவரைத் தெரியாதவர்களும் யாரும் கிடையாது.கிட்டத்தட்ட எண்பது வருட காலமாக பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார் பிள்ளைகளும் கிடையாது. தனிமையின் கொடுமையை அனுபவித்து வருபவருக்கு ஆறுதல் படிப்பதும் எழுதுவதும்தான்.இவருக்கு மத்திய அரசின் தியாகி பென்ஷன் வருகிறது தமிழக அரசின் பத்திரிகையாளர் பென்ஷன் வந்து கொண்டிருந்தது.தியாகி பென்ஷனை தனது புத்தகங்களை மறுபதிப்பு செய்வதற்கும், பத்திரிகையாளர் பென்ஷனை சாப்பாடு மற்றம் மருத்துவ செலவிற்கு என்றும் பிரித்து வைத்துக்கொண்டிருந்தார்.இதுதான் ஐமாபாவின் முன்னோட்டம்.
நம்நாடு சுதந்திரம் பெறுவதற்காக இன்னுயிரான தன்னுயிர்பற்றி கவலைப்படாமல் அரும்பாடு பட்டவர்களில் உயிருடன் இருப்பவர்கள் மிகக்குறைவு அதிலும் சுதந்திர போராட்ட உணர்வுகள் குறைந்துவிடாது உயிர்ப்புடன் இருப்பவர்கள் இன்னும் குறைவு அவர்களில் அநேகமாக நம் மண்ணில் எஞ்சியிருப்பவர் ஐமாபா மட்டுமே என்றே தோன்றுகிறது.என் போராட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்விப்பட்டு தொழில்துறை அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் உனக்கு என்ன தொழில் வேண்டும் நான் அனுமதிக்கிறேன் என்றார் ஐயா தயவு செய்து என்னை பணக்காரனாக்கிடாதீங்க என்று சொல்லிவிட்டு அவரது அனுமதியை மறுத்தவன் நான்.என்னுடைய ஆசை எல்லாம் அன்றாடம் நிறைய மாணவர்களை பார்த்து சுதந்திர போராட்ட வரலாறை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் அதற்கேற்ற வசதியைத் தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லை.எனது புத்தகங்களை மலிவு விலை பதிப்பாக போட்டு மாணவர்களுக்கு கொடுத்துவருகிறேன் எனக்கு வரும் மத்திய அரசு பென்ஷன் தொகை அந்த புத்தக பதிப்பு செலவிற்கே சரியாகப் போய்விடுகிறது பத்திரிகையாளர் பென்ஷனில்தான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன் இப்போது கடந்த நான்கு மாதங்களாக அதை நிறுத்திவிட்டார்கள். கேட்டால் கேலி செய்து சிரிக்கிறார்களே தவிர காரணம் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.
மேற்கொண்டு பேச தெம்பு இல்லாதவராக அப்படியே படுக்கையில் சாய்ந்து படுத்துக் கொள்கிறார்.

No comments: