Saturday 1 November 2014

இறைவனை படைக்கும் மனிதர்கள்!

இறைவனைத்தேடி நாம் செல்வதுதான் பொதுவாக மக்களின் வழக்கம். ஆனால் அதற்கு மாறாக நாம் செல்லும் சாலைகளில் நமக்காக காத்திருக்கிறார்கள் கடவுளர்கள்
வாசுகியின் மீது திருமால், குழலுடன் கண்ணன் ,பழனிமலை முருகன், பிரமாண்ட பிள்ளையார் என அத்தனை கடவுளர்களும் விதவிதமான வடிவங்களில் நிறங்களில் நம் இல்லத்துக்கு வந்துவிடும் ஆவலோடு சாலையோரங்களில் தவம் கிடக்கிறார்கள் நமக்காக. அத்தனையும் கடவுளர் பொம்மைகள். அதனருகில் கடவுளை விற்கும் ஆர்வத்தில் கசங்கிய உடையும் ஒட்டிய வயிறுமாக சில மனிதர்கள். அவர்கள்தான் அந்த கடவுளர்களை உருவாக்கிய மனிதர்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் ஒரு தலைவர். ஆனால் இறைவனையே படைக்கும் இவர்கள் முகத்தில் மட்டும் சிரிப்பு என்பதை காணவே முடியவில்லைசின்னக் குடில், பிடித்த வண்ணத்தில் கூரை, வெயிலில் ஒய்வெடுக்கவும், மழையில் ஒதுங்கிக்கொள்ளவும் கூரையில் சிறு சிறு ஒட்டைகளுடன் கூடிய குடில் அல்லது கூடாரம். இதுதான் இவர்களின் மாளிகை. எல்லா ஊர்களின் நெடுஞ்சாலைகளிலும் இப்படி ஒரு கூட்டம் ஏழ்மையின் நிரந்தர முகவரியோடு இருக்கிறார்கள்.

மழைக்காலங்களில் இத்தைகைய குடிசைப் பகுதிகளை கடந்து செல்லும் போதெல்லாம் யாரோ காதுகளில் முகாரி ராகம் பாடுவதாகவே உணர்கிறோம். பெரும்பாலும் வடமாநிலத்தவர்களாகவே இருக்கிறார்கள் அதுவும் இன்றைக்கு.. நேற்று தமிழகத்தில் தஞ்சம் அடைத்தவர்கள் அல்ல. வயிற்றுப் பாட்டுக்கு   கையில் கொஞ்சம் திறமையோடு, உழைப்பை நம்பி பல வருடங்களுக்கு முன் இங்கு வந்தவர்கள். இத்தனை வருடங்களில் வயதானதைதவிர அவர்கள் தோற்றத்தில் எந்த மாற்றமுமில்லை. வறுமை அப்படியே தொடர்கிறது.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் தங்கியபடி மேற்கூறிய கடவுளர்கள் பொம்மைகளை, குடும்பத்தினர் இணைந்து செய்கிறார்கள். பகல் இரவு என்று வேலை நேரம் ஒதுக்கிக்கொள்வது கிடையாதுபகலில் மக்கள் கூடும் இடங்களில் தங்கள் பொம்மைகளுக்கு கடைவிரிக்கிறார்கள்இதுவும் நிரந்தரமல்ல. ஒரு இடத்தில் இருந்து வெளியேறக் கேட்டுக் கொண்டால், அடுத்த இடம் தேடிப் பிடிக்கிறார்கள்சில பிரச்னைகளுக்குப்ப்பிறகு வேறு இடத்தில் தங்கவேண்டிய நிலை. பெரியவர்கள் வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடிக்கொண்டிருக்க, அவர்களின் பிள்ளைகள் கல்வியை இழந்து  விடுகின்றனர். அவர்கள் நிச்சயம் பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. .குபேரன் பொம்மையை வீட்டின் பூஜை அறையிலிருந்தால் செல்வம் கொழிக்கும்.. ஏழ்மை நீங்கும் என்பதெ ல்லாம் காலம் காலமாக புழங்கி வரும் மூடநம்பிக்கைதான் என்பதை பட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்து சொல்கிறது சாலையோரத்தில் குபேர பொம்மையை விற்கும் இந்த கைவினைக் கலைஞர் களைப் பார்க்கிறபோதுகாரணம் அத்தனை குபேர பொம்மைகளும்  இந்த குடிசைகளில்..!

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

குபேரன்களையே தங்கள் கை வண்ணத்தில் உருவாக்கும் இவர்கள் குபேரன்கள் ஆக இயலாதது வருத்தம்தான் ஐயா