Saturday 8 November 2014

சீர்குலைவு நடவடிக்கைகளுக்கே சீர்திருத்தம் என்று பெயர் !

பகட்டான அறிவிப்புகளுக்கிடையே மத்திய ஆட்சியதிகாரத்திற்கு தான் வந்ததன் இரண்டுநோக்கங்களைச் செயல்படுத்துவதில் மும்முர மாக இருக்கிறது பாஜக. ஒரு நோக்கம், ஆர்எஸ் எஸ் செயல்திட்டத்தின்படி அரசு எந்திரங்களில் மதவெறி ஆதிக்கங்களுக்கு ஏற்பாடு செய்வது. இந்தி - சமஸ்கிருத திணிப்பு, முக்கியப் பதவி களில் மதவெறி கண்ணோட்டமுள்ளோர் நியமிப்பு, பள்ளிப்பாடங்களில் பழமைக் கருத்துகள் நுழைப்பு போன்றவை அப்படிப்பட்ட நடவடிக்கைகள்தான். இன்னொரு நோக்கம், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தத் துடிக்கும்உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் சக்தி களுடைய தேவைகளை நிறைவேற்றுவது.இரண்டாவது நோக்கத்தில் முனைப்பாக இருப்பதன் எடுத்துக்காட்டாகத்தான் நிதியமைச் சர் அருண்ஜெட்லி கார்ப்பரேட்டுகளின் எதிர் பார்ப்புகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியை அளித்திருக்கிறார்.
உலகபொருளாதார மன்றம் என்ற அமைப்பும், பெருமுதலாளிகள் அமைப்பாகிய இந்திய தொழில்நிறு வனங்கள் கூட்டமைப்பும் (CII) தலைநகர் தில்லியில் நவ.5 அன்று நடத்திய இந்திய உச்சிமாநாட்டில், பிரதிநிதிகளிடமிருந்து வந்த கேள்விகளுக்கு பதிலளித்தபோதுதான் அவர் இப்படிப்பட்ட உறுதியளித்திருக்கிறார்.நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும், நிலம் கையகப் படுத்தல் விதிகள் எளிதாக்கப்படும், தொழிலாளர் சட்டங்களில்சீர்திருத்தங்கள்செய்யப்படும் என்ற மூன்று வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் அவர்.பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக விற்பதற்கு மாறாக, அவற்றின் அரசுப் பங்குகளை விலக்கிக் கொள்வதற்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது, எனினும் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களைவிற்றுவிட வேண் டும் என்பதே தன் நிலைபாடு என்றும் அவர் கூறி யிருக்கிறார். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை வாங்கிக் கொள்ள யார் முன்வருவார்கள்? அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு பிற்காலத்தில் லாபகரமான பொதுத்துறைகளையும் தனியார் பசிக்கு விருந்தாக்குவதே இவர்களது திட்டம்.தங்களது திட்டங்களுக்கு நிலம் தேவைப் படுகிறபோது அதற்குப் பல முட்டுக்கட்டைகள் இருப்பதாக கார்ப்பரேட் அதிபர்கள் கூறியபோது, அதை அமைச்சர் ஒப்புக்கொண்டதோடு, விதிகள் எளிதாக்கப்படும் என்றார். இயற்கைச் சமநிலை, வனவாழ் மக்களின் வாழ்வாதாரம் போன்ற காரணங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள விதிகள் கார்ப்பரேட்டுகளின் நில ஆக்கிர மிப்புக்கு இடைஞ்சலாக இருப்பதால் அவை கைவிடப்படும் என்பதே இதன் பொருள். முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், இதற்கென அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது போன்ற நடவடிக்கைகளின் பாஜக பதிப்புதான் இது.பன்னாட்டு மேடைகளில் உலகச் சந்தைசக்திகள் வற்புறுத்தி வந்திருப்பது, இந்தியாவில் தொழிலாளர்களுக்கான சங்க உரிமை, பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ ஏற்பாடுகள் தங்களுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன என்பதே. ஏற்கெனவே இப்படிப்பட்ட பாது காப்புகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கைவிடப்பட்டுவிட்டன.தொழிலாளர்கள் இப்படிக் கைவிடப்படுவதை மேலும் விரிவு படுத்துவதற்கான வாக்குறுதியைத்தான் அளித் திருக்கிறார் அமைச்சர். நாட்டின் பொருளாதார நலன்களையும், நில வளங்களையும், உழைப்பா ளர் உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்கிற இந்த வாக்குறுதிகளின் உண்மைப் பொருள்களை மக்கள் அறிந்திடச் செய்தாக வேண்டும்.
செய்தி: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (MTNL), ஏர் இந்தியா, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், இந்துஸ்தான் பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேசன், எச்எம்டி மிஷின் டூல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை விற்று நிதி சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்களை உடனடியாக மூடுவதற்கான ஆலோசனைகளை வரையறை செய்துவருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: