Saturday 13 September 2014

மதுரை - அனைத்து சங்கங்கள் வலியுறுத்தல். . .

கைத்தறித் தொழிலாளர் பிரச்சனையில் தொழிலாளர் துறை தலையிட வேண்டும்-அனைத்து சங்கங்கள் வலியுறுத்தல்...

மதுரை,செப். 12 -செல்லூர் கைத்தறித் தொழிலாளர்களுக்கு கூலிஉயர்வு, போனஸ் பிரச்சனையில் தீர்வு காண தொழிலாளர் துறையை தமிழக அரசுவலியுறுத்த வேண்டும் என்று மதுரை நகர அனைத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது. மதுரை நகர அனைத்து தொழிற்சங்க கூட்டம் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் வீ.பிச்சை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்டத்தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம், செயலாளர் நா.சுரேஷ்குமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சோ.நடராஜன், மாவட்டத் தலைவர் மு.முருகன், மூட்டா செயலாளர் .டி.செந்தாமரை கண்ணன், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பன்னீர்செல்வம், வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.செல்லூர் கைத்தறி நெசவாளர்கள் 50 சதவீதம் கூலிஉயர்வு, 30 சதவீதம் போனஸ் கோரிக்கைகளை முன் வைத்து 45 நாட்களாக போராடி வருகிறார்கள். 12 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாட்டிற்கு வர கைத்தறி உற்பத்தியாளர்கள் மறுத்து வருவது கவலை அளிப்பதாகும். கைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - பேரணி நடத்தி தற்போது அக். 25- ம் தேதி முதல் முழு அளவில் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். எனவே, தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர் நிர்வாகமும் உடனடியாக தலை யிட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண தொழிலாளர் துறையை அறிவுறுத்த வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. தொடர்ந்து கூலி உயர்வுப் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காணப்படாத நிலையில் அனைத்து தொழிற்சங்கம் ஒன்றுகூடி அடுத்தகட்ட முடிவுக்கு செல்வது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments: