Wednesday 3 September 2014

நாடுநம்முடையதுரோடுயாருடையது?...

தமிழகத்தில் உள்ள 21 சுங்கச் சாவடிகளில் 10 முதல் 25 சதவீதம் வரை கட்டண உயர்வு திங்கள் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. லாரிகளில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணமும் உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,500 கிலோ மீட்டர் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. முந்தைய பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்திலும், அதன் பின்பு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்திலும் 4 வழிச் சாலைகள் அமைக்கும் பணி பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சியின் போது இதற்கு தங்க நாற்கரசாலை என்று பெயரிடப்பட்டது.சாலை அமைப்பது மற்றும் பராமரிக்கும் பணியை பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் மேற்கொள்வது, அந்தச் செலவை ஈடுகட்ட வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துக் கொள்வது என்று அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் சாலை அமைத்த செலவை விட பல மடங்கு சம்பாதித்துவிட்டன. ஆனாலும் இந்த பகலிரவு கொள்ளை இடைவிடாமல் நடந்து கொண்டே யிருக்கிறது.சாலையை அமைக்க இந்த நிறுவனங்கள் செய்த செலவு என்ன, இதுவரை வசூலித்துள்ள தொகை எவ்வளவு என்பதெல்லாம் பெரிய ரகசியமாக உள்ளது.இதனால் சுங்கச் சாவடிகளில் பலமுறை மோதல் வெடித்துள்ளது. சில இடங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டு கட்டணங்களை குறைக்குமாறு கூறியபோதும், சுங்கச் சாவடி கொள்ளையர்கள் கண்டுகொள்வதாக இல்லை.தமிழகத்தில் சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றில் சராசரியாக நாளொன்றுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வசூல் ஆவதாக கூறப்படுகிறது. உண்மையில் இதைவிட அதிகமாகதான் இருக்க வாய்ப்புள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 12 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 21 சுங்கச் சாவடிகளில் ஜீப், கார்களுக்கு ரூ.8, லாரிகளுக்கு ரூ.13, கனரக வாகனங்களுக்கு ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிக்காக கட்டணம் உயர்த்தப் படுவதாக கூறினாலும், பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளதோடு, இது குறித்து மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவேயில்லை. இப்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி கட்டணத்தைஉயர்த்தியுள்ளனர். தீபாவளி போன்ற போக்குவரத்து தேவை அதிகமுள்ள காலங்களில் இந்த கொள்ளை உச்சகட்டத்தை அடையும்.மத்திய அரசின் கொள்கை காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சுங்கச் சாவடி கட்டண உயர்வால் லாரி கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அமையும். மொத்தத்தில் சாலைப் போக்குவரத்தும் பெருமுதலாளிகளின் கொள்ளைக்கு திறந்துவிடப்பட்டுள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை.

No comments: