Saturday 6 September 2014

கிங் பிஷர் ஊழியர் 9000 பேர் பட்டினி: தற்கொலை- அபாயம்...

சாராய அதிபர் விஐய் மல்லையாவின் கிங் பிஷர் விமானக்கம்பெனி 10, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று அதனை திரும்பத்தராததைத் தொடர்ந்து அந்நிறுவனம் மூடப்பட்டது, கடனாளியான விஜய் மல்லையா கடனை திரும்பித்தராமல் மோசடி செய்தவர் என்று வங்கிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் 9 ஆயிரம் ஊழியர்களின் நிலை பரிதாபத்துக் குரியதாக மாறியுள்ளது என கிங்பிஷர் கம்பெனி தொழிலாளர் களின் தலைவர்கள் தெரிவித் துள்ளனர். இது தொடர்பாக பெங்களூரில் வெள்ளியன்று பத்திரிகை யாளர்களிடம் பேசிய தொழிலாளர்களின் தலை வர்கள் கூறியதாவது:கிங் பிஷர் விமானக் நிறுவனம் நன்றாக இயங்கிய போது அதில் 9 ஆயிரம் பேர் பணி புரிந்தனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியமாக 35 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக கடன் நெருக்கடியில் சிக்கிய கம்பெனி, ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யத் தொடங்கி விட்டது. பல மாதங்களாக விமான ஓட்டுநர் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை யாருக்கும் ஊதியம் தரவில்லை. வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனைப் பெற்று திரும்பித் தராத நிலையில் கிங் பிஷர் நிறுவனம் மூடப்பட்டு விட்டது.மேலும் விஜய் மல்லையா பஞ்சாப் நேசனல் வங்கி உள்ளிட்ட பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று திருப்பித்தராத மோசடியாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். திடீரென்று கம்பெனி மூடப்பட்டுள்ளதாலும் பல மாதங்களாக சம்பளம் தராததாலும் இதில் பணி புரிந்தவர்கள் மேலும் நெருக்கடி களுக்குள்ளாகி உணவுக்கே வழியின்றி பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே எங்களுக்கு வேலை வாய்ப்பும் சம்பள பாக்கியையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தொழிலாளர் சங்க தலைவர்கள் கூறியுள்ளனர்.

No comments: