Saturday 2 August 2014

UPSC- தேர்வை தமிழில் நடத்துக! CPI(M) வலியுறுத்தல்...

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வினை தமிழ் உள்பட அவரவர் தாய்மொழியில் நடத்திட வேண்டு மென   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர்   ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
IAS, IPS உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்தத் தேர்வில் முதல் இரண்டு நிலைகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்வித்தாள்கள் இருப்பதால் ஆங்கிலத்தில் புரியாத கேள்விகளை இந்தி பேசும் மாநில மாணவர்கள் இந்தியில் படித்து புரிந்து விடையளிக்கும் வாய்ப்பினை பெறும் நிலை உள்ளது. ஆனால், தமிழ் உட்பட பிற தாய்மொழி பேசும் மாணவர்களுக்கு தங்கள் மொழியில் படித்துப் புரிந்து விடையளிக்கும் வாய்ப்பு இல்லை. இதனால் இந்தி அல்லாத தமிழ் உள்ளிட்ட பிறதாய்மொழி பேசும் மாணவர் களின் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்விகிதம் குறைகிறது.இதுபோல 2011ம் ஆண்டு முன்பிருந்த விருப்பப்பாடத்தாள் நீக்கப்பட்டு, அதற்குபதிலாக சிசாட் எனப்படும் சிவில் சர்வீஸ் திறனறித்தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. சிசாட் தேர்வில் ஆங்கில மொழிக்கும், ஆய்வுத்திறனுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், ஆங்கில வழிக்கல்வி பயிலாத தமிழ் உள்ளிட்ட தாய்மொழி வழிக்கல்வி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எனவே, சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வில் தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பிற தாய்மொழிகளில் வினாத்தாள்கள் அமைவதையும், சிசாட் - திறனறிவுத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட தாய்மொழி வழிக்கல்வி மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்திட வேண்டுமென்றும், இதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது

No comments: