Thursday 28 August 2014

ஃபிடல் காஸ்ட்ரோ அழைத்து விருந்தளித்த 8 வயது வி.ஐ.பி.!

நடை, உடை, பாவனைகளில் தன்னை அப்படியே பிரதிபலித்த 8 வயது சிறுவனை வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்து வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் ஃபிடல் காஸ்ட்ரோ.கியூபா புரட்சியாளரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான ஃபிடல் காஸ்ட்ரோ, கடந்த 2008-ஆம் ஆண்டு, உடல் நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி தனது பொறுப்புகள் அனைத்தையும் தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் வழங்கினார்.
அதன் பின்னர், பொது இடங்களில் தோன்றாத காஸ்டரோ, கட்டுரைகள் எழுதுவது, வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளார்.இதனால், கியூபா மக்களுக்கு காஸ்ட்ரோவை நேரிலோ, தொலைக்காட்சியிலோ காணும் வாய்ப்பு எளிதில் கிடைக்காமல் போனது. ஆனால், அந்நாட்டின் 8 வயது சிறுவனுக்கு காஸ்ட்ரோவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பே கிடைத்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஃபிடல் காஸ்ட்ரோ தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, கியூபா தொலைக்காட்சிகள் அவரை சிறப்பிக்கும் நிகழ்ச்சிகள் பலவற்றை ஒளிபரப்பின. அப்போது 8 வயது சிறுவன் மர்லோன், ஃபிடல் காஸ்ட்ரோ இளம் வயதில் இருந்த கெட்டப்பில் தொலைக்காட்சியில் தோன்றினான். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.பச்சை நிற கம்பீர உடையுடன், பிடல் காஸ்ட்ரோ அணிவது போன்ற ஷூ மற்றும் தொப்பியும் உடுத்தியிருந்தான். அவருடன் எப்போதும் காணப்படும் தாடியும், சிகரெட்டும் மட்டும் சிறுவனிடம் இல்லை. (1985-ஆம் ஆண்டு முதல் பிடல் காஸ்ட்ரோ புகைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார். அதன் பின் அவரை யாரும் சிகரெட்டுடன் கண்டதில்லை.)சிறுவன் மர்லோனின் அறை முழுவதும் பிடல் காஸ்ட்ரோவின் படங்கள் நிறைந்திருந்தன. படுக்கை மட்டும் குழந்தைகளுக்கானதாக இருந்தது. மர்லோன் குறித்த வீடியோ பதிவு வெளியானது. 8 வயது பிடல் காஸ்ட்ரோ என்று புகழ் பெறக் கூடிய அளவிற்கு மக்கள் அந்தச் சிறுவனை ரசித்தனர்.உள்நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பிய பிடல் காஸ்ட்ரோ போன்று உடை அணியும் மர்லோன் குறித்த செய்தி பிரபல பத்திரிகைகளிலும் பரவியது. இதனை அடுத்து, மர்லோனுக்கு "என் சிறந்த நண்பர் மார்லன் மெண்டஸ்" என்று விலாசத்தில் குறிப்பிடப்பட்ட அழைப்பு ஒன்று வந்தது. அது, ஃபிடல் காஸ்ட்ரோ தனது கைப்பட, மர்லோனுக்கு எழுதிய அழைப்புக் கடிதம்.இதையடுத்து, ஆகஸ்ட் 16- ஆம் தேதி, மர்லோன் மெண்டஸ் தனது குடும்பத்தினருடன், பிடல் காஸ்ட்ரோ போலவே உடை அணிந்து அவரது ஹவானா இல்லத்திற்குச் சென்று சந்தித்தான். மர்லோனின் பாட்டி, விவசாயம் மற்றும் வெனிசுலா பிரச்சினை குறித்து பிடல் காஸ்ட்ரோவிடம் பேசினார். பிடல் காஸ்ட்ரோவுடன் குடும்பத்தினர் அனைவரும் சில மணி நேர உரையாடல் நடத்தினர். பின்னர் வரலாற்று சிறப்பாக இந்தச் சந்திப்பு பதிவு பெற அவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.88 வயது ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 8 வயது மர்லோன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது கியூபாவில் பிரபலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது.ஃபிடல் காஸ்ட்ரோவின் அழைப்பு வந்தவுடன், மர்லோனின் தந்தை வெடவெடுத்து விட்டராம். "அவர் நீண்ட நெடு நாட்கள் வாழ வேண்டும் என்பது எங்களது விருப்பம்" என்கிறார் சிறுவன் மர்லோனின் பாட்டி மரியா.

No comments: