Sunday 20 July 2014

இஸ்ரேலின் அடாவடித்தனத்தை கண்டித்து CITU ஆர்ப்பாட்டம்...

பாலஸ்தீனத்தின் சுயாட்சிப் பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாகவும், வான்வழியாகவும் முற்றுகையிட்டு கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து காசா பகுதி முழுவதையும் சுடுகாடாக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியிருக்கிறது. சர்வதேச நாடுகளின் கண்டனங் களையும் பொருட்படுத்தாத இஸ்ரேல், அமெரிக்காவின் ஆதரவோடு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை 300 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலா னோர் குழந்தைகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் ஆவர். ஏற்கனவே இஸ்ரேல் அத்துமீறி பாலஸ்தீனத்தின் மேற்கு கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து அட்டூழியம் செய்து வருகிறது. இதில் சொந்த நிலத்தில் வாழும் பாலஸ்தீனியர்களின் அடிப்படை உரிமைகளை கூட மறுத்து அங்கிருந்து விரட்டி தனது ஆக்கிரமிப்பு முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தற்போதைய தாக்குதலை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆணவத்துடன் கூறிவருகிறார். எதற்கெடுத்தாலும் மனித உரிமை, சர்வேதச அமைதி என முழங்கி வரும் அமெரிக்கா கள்ளப்புன்னகை செய்து வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ஈவிரக்க மற்ற இஸ்ரேலின் தாக்குதலுக்கு மறைமுக ஆதரவளித்து வருகிறார். ஐந்தாம் நாளாகத் தொடரும் தாக்குதலில் வீட்டிற்குள் ஒளிந்தபடி உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் காசா பகுதி பெண்கள்குறிப்பாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தான குண்டுகளை வீசி அழித்து வருகிறது. குண்டுவீச்சுகளில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் நார்வேயை  சேர்ந்த மருத்துவக் குழுவினர் காயங்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்திருக்கிறது. இஸ்ரேல் பயன்படுத்தி வரும் குண்டுகளில் அணுக்கழிவுகள், பாஸ்பரஸ் உள்ளிட்ட மிகக் கொடிய அழிவுப் பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த வேதிப்பொருள்கள் காயங்கள் வழியாக உடலுக்குள் சென்று புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் .நா மற்றும் உலக நாடுகள் முழுவதும் இஸ்ரேலின் அடாவடித்தனத்தை கண்டித்து வருகின்றன. ஆனால் பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த மோதல் கவலையளிக்கிறது என்று கூறியதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக கருதியுள்ளார். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இஸ்ரேலும், பலஸ்தீனமும் நட்பு நாடுகள் என்றும் எனவே இந்த மோதல் குறித்து விவாதிக்க முடியாது என்றும் அயல்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விசித்திரமாக வியாக்கியானம் அளித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகும் நாட்டையும், கொடூரமாகத் தாக்கும் நாட்டையும் ஒரே மாதிரி அணுகுவது நியாயம்தானா? இது பலஸ்தீனத்தின் பின்னால் உலகநாடுகள் நிற்கவேண்டியநேரம்
      அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வரும் ஏகாதிபத்திய இஸ்ரேலைக் கண்டித்து மதுரையில் CITUசங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இஸ்ரேலுடனான ராணுவ ஒப்பந்தத்தை இந்திய அரசு வாபஸ் பெற வலியுறித்தியும், இஸ்ரேல் மீது ஐ.நா .சபை உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை முனிச்சாலை,தினமணி திரையரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு CITU மாவட்ட உதவித்தலைவர் சி.சுப்பையா தலைமை வகித்தார். CITU மதுரை மாநகர் மாவட்டச் செயலர் வீ .பிச்சை,  CITU மாவட்ட உதவித்தலைவர் அ.ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.  CITU மாவட்ட துணைத்தலைவர் பா.விக்ரமன் சிறப்புரையாற்றினார்.CITU மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சந்தியாகு, ஆர்.சங்கரன், எஸ்.முருகன், ஜி.ராஜேந்திரன், ஜி.எஸ்.அமர்நாத், இரா.ராசகோபால் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments: