Saturday 5 July 2014

வேலை உத்தரவாதச் சட்டம் ரத்து - மோடி அரசு சதி...

கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்தை ரத்து செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில், கிராமப்புற வேலை உத்தரவாதச்சட்டத்தை அமலாக்குவதில் உள்ள பல்வேறு அடிப்படையான பிரச்சனைகளையும் பலவீனங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2013-14ம் ஆண்டில், அதிர்ச்சி தரத்தக்க வகையில் நாடு முழுவதும் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றிய மக்களுக்கு 60 சதவீத கூலியை தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தத்தொகை சுமார் ரூ.16 ஆயிரம் கோடி ஆகும். இதன் விளைவு, லட்சக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலை செய்தும் உரிய பலனைப் பெற முடியாமல் துயரத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.* நாடு முழுவதும் அன்றாடம் கூலி வழங்கப்படுவதில்லை; பல மாநிலங்களில் கூலியை பெறுவதற்கு 21 நாட்கள் முதல் 6 மாதம் வரை கிராமப்புற ஏழைகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பல இடங்களில் செய்த வேலைக்கு கூலி வழங்கப்படாமலேயே சூறையாடப்பட்டுள்ளது.
2012-13ம் ஆண்டில் மட்டும் இப்படி கொடுக்கப்படாத கூலியின் மதிப்பு மொத்தம் ரூ.4,500 கோடி ஆகும்.* நாட்டின் எந்த பகுதியிலும் கொடுக்கப்படாத அல்லது தாமதப்படுத்தப்பட்ட கூலிக்கு இழப்பீடாக எந்தத் தொழிலாளிக்கும் சட்டப்படியான இழப்பீடோ நிவாரணமோ வழங்கப்படவில்லை. * அதேபோல எங்குமே வேலையில்லா நாட்களுக்கான மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. 15 நாட்களுக்குள் உரிய வேலை வழங்கப்படாவிட்டால் அதற்கான மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பது சட்டம். இப்படி 2013-14 ஆண்டில் மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய மதிப்பூதியம் ரூ. 2,923 கோடியாகும். ஆனால் நாட்டின் எந்த பகுதியிலும் எந்தத் தொழிலாளிக்கும் ஒரு பைசா கூட இந்த வகையில் வழங்கப்படவில்லை. 2014-15ம் (நடப்பு நிதியாண்டு) ஆண்டில் இதுவரையான காலத்தில் மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய தொகை ரூ.1371 கோடி ஆகும். இதுவும் வழங்கப்படவில்லை.
அதேபோல 100 நாட்கள் வேலை என்பதும் பல மாநிலங்களில் முறையாக அமலாக்கப்படவில்லை. இந்த நாட்களின் எண்ணிக்கை யை அதிகரிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அதை வெட்டிச்சுருக்க அரசு முயற்சிப்பது தவறானது. 2013-14ம் ஆண்டில் நாடு முழுவதும்நடந்த பணிகளில் சுமார் 78 சதவீதப் பணிகள் கிராமப்புற நீர்ப்பாசன வசதியை உறுதி செய்வதற்கான பணிகள் மற்றும் நில மேம்பாட்டுப் பணிகளே. எனவே கிராமப்புற விவசாய மேம்பாட்டிற்கு இந்த சட்டம் இன்னும் தீவிரமாக அமலாக்கப்படுவது அவசியமாகும்.

No comments: