Thursday, 5 March 2015

டால்மியாவை வரவேற்க காக்க வைக்கப்பட்ட சிறுமிகள்.

கொல்கத்தா விமான நிலையத்தில் டால்மியாவை வரவேற்க 50 குழந்தைகள் நள்ளிரவு வரை காக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொல்கத்தா விமான நிலையத்தில் செவ்வாயன்று நள்ளிரவு 11.30 மணி வரை பூங்கொத்துகளுடன் 50 பள்ளிக் குழந்தைகள் காத்திருந்தனர். அவர்கள் யாருக்காக காத்திருக்கின்றனர் என்பது தெரியாமல் அங்கிருந்தவர்கள் திகைத்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவராக ஜக் மோகன் டால்மியா தேர்ந்தெடுக் கப்பட்டதைத்தொடர்ந்து அவர் கொல்கத்தாவிற்கு வருவதால் அவரை வரவேற்க அவரது நண்பர் ஒருவர் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்போது கொல்கத்தா விமான நிலையத்திற்கு தனது நண்பரை வரவேற்க வந்த ஷஷந்த தஸ்வானி என்பவர் அங்கு நடந்தவற்றை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவுசெய்தார். இது குறித்து அவரது நண்பரான அரோராவும் இது காலனி ஆதிக்கத்தின் நீட்சி. நீங்கள் ஒரு கிரிக்கெட் நிர்வாகி. டால்மியா உங்கள் நண்பர் என்றால் நீங்கள் சென்று வரவேற்பளியுங்கள். ஆனால் எதற்காக குழந்தைகள் கட்டாயப்படுத்தி நள்ளிரவு வரை காத்திருக்க வைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து தகவல் பரவியதையடுத்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் குழந்தை நல அமைப்பினர், சிறு மிகள் நள்ளிரவு வரை வரவேற்பிற்காக காக்க வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தீவிரவாதத் தடுப்புச் சட்டம் : - USAவிற்கு சீனா எச்சரிக்கை.

சீனாவின் தீவிரவாத தடுப்பு சட்டம் குறித்து, சீனாவிற்கு கட்டளையிடும் அமெரிக்காவின் கருத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருப்ப தோடு, எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.சீன அரசு தீவிரவாதத்தை தடுக்க அனைத்து தகவல் தொடர்பு மற்றும் இன்டர்நெட் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. இது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த திங்கள்கிழமை கருத்து தெரிவிக்கையில், சீனா அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்ய விரும்பினால், தீவிரவாத தடுப்பு சட்டத்தில் தற்போது சீனா எடுத்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஒபாமாவின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து சீன வெளியு றவுத் துறை அதிகாரப்பூர்வ பேச்சாளர் ஹூசாங் கூறும்போது, புதிய சட்டங்கள் இயற்றுவது சீனாவின் உள்விவகாரம். இதில் தலையிட அமெரிக்கா உள்பட எந்த நாட்டுக்கும் அதிகாரம் இல்லை. சீனாவில் தீவிரவா தத்தை தடுக்கவும், தீவிரவாதம்பரவுவதை தடுக்கவும் தான் அந்தசட்டம் கொண்டு வரப்பட் டது.சில நாடுகள் உளவு மென்பொருட்களை தயாரித்து விற்கின்றன. இதனால் இந்த சட் டம் அவசியமாகிறது என்று தெரி வித்தார்.

காவிமயமாக்க மோடி அரசு முயற்சி - நீதிபதி சந்துரு.

மத்தியில் ஆட்சி செய்யும்கட்சி, இந்தியாவை காவி மயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினார்.சென்னை புதுக்கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை சார்பில் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது.இந்த கருத்தரங்கிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமை வகித்தார். கருத்தரங்கில் முன்னாள்நீதிபதி சந்துரு பேசியதாவது:மனித உரிமை என்பது ஒரு மனிதனுக்கு ரத்தமும் சதையும் போன்றது. மனிதஉரிமை நமது வாழ்வில் ஒருபகுதியாக மாற வேண்டும். அதனை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். முள்வேலி முகாம்கள் இலங்கையில் மட்டும் தான்இருக்கிறது என்று நினைக்காதீர்கள். சென்னையில் கண்ணகிநகர் உள்ளிட்ட சில பகுதிகள் முள்வேலி முகாம்கள் போல் உள்ளது. இங்கும் மனிதர்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறலுக்கு சிறந்த உதாரண மாகும்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது தடை செய்யப் பட்டுள்ளது.மனிதன் என்ன சாப்பிடவேண்டும் என்பது அவனது உரிமை. நம்முடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைக்கு மகாராஷ்டிராவில் வந்துள்ள இச்சட்டம்நாளை குஜராத்திலும், தமிழகத்திலும் கூட கொண்டு வரப்படலாம். எனவே, நமதுஉரிமையை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டாம்.மத்தியில் ஆட்சி புரியும் கட்சி, இந்தியாவை காவிமயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும்,பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கு யார் இந்தஉரிமையை கொடுத்தது.இதனை புரிந்து கொண்டால் மனித உரிமைகள் என்னவென்பது தெளிவாகும். இதையெல்லாம் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இளைஞர்கள் பொறுமையாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

திருவாளர் மோடி அவர்களே வதந்தியைப் பரப்பாதீர்கள்!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்தபோது, ரூ.15லட்சம் செலவில் கோட் தயாரித்து அந்த கோட் முழுவதும்தனது பெயரை பொறித்துக் கொண்டு வரவேற்பு வழங்கிய பரமஏழை நரேந்திர மோடிநாடாளுமன்ற மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசியபோது, “ஏழைகளுக்காகவே ஆட்சி நடத்துகிறோம்,
இது சாமானியர்களின் அரசுஎன்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.தேர்தல் பரப்புரையின்போது நான் ஒருடீக்கடைக்காரன் என்று அதானி ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் பறந்து பறந்துசென்று பேசியவர் நரேந்திர மோடி. ஆனால்பொதுவாக நாடாளுமன்றத்தில் நடைபெறும்விவாதத்திற்கு இவர் பதிலளிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தநிலையில், தேர்தல்பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் ஆவேசமான உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதன்பிறகு எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்க முயன்றநிலையில் பதலளிக்க அவர் அவையில் இல்லை.வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவருவதே தமது அரசின் தலையாய பணியாக இருப்பதாக மோடி கூறியுள்ளார். இதுவரை ஒரு நயாபைசாவையாவது மோடி அரசு மீட்டிருக்கிறதா? தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிநாட்டில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் மீட்டுஇந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15லட்சம் செலுத்தப்போவதாக அள்ளிவிட்டார் மோடி. இவர் ஆட்சிக்கு வந்த பிறகுஅனைவருக்கும் வங்கிக் கணக்குதிட்டம்என்று துவங்கப்பட்டபோது, ரூ.15லட்சத்தை போடுவதற்காகத்தான் வங்கிக் கணக்கு துவக்கச்சொல்கிறார் போலும் என்று பலரும் ஆர்வமாக கணக்கைத் துவக்கினர். வங்கியின் பாஸ்புத்தகம் வாங்கியதோடு சரி, யாருடைய கணக்கிலும் இதுவரை மோடி பணம் போடவும் இல்லை,வெளிநாட்டு வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர் யாரையும் பிடிக்கவும் இல்லை. தூய்மை இந்தியா திட்டம் அனைவருக்கும் வீடு, அரசுப்பள்ளிகளில் கட்டாயக் கழிப்பறை போன்ற திட்டங்களெல்லாம் செல்வந்தர்கள் பலன் பெறுவதற்காக அல்ல, அனைத்துமே ஏழை, எளிய மக்களுக்காகத்தான் என்று மோடி முழங்கியிருக்கிறார். தூய்மை இந்தியாதிட்டம் என்பது மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் விளக்குமாறோடு ஒரு நாள் காட்சியளித்து படத்திற்கு போஸ் கொடுத்ததோடு முடிந்துவிட்டது.இதனால்தான் தில்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் சின்னமான விளக்கமாறு சின்னத்தில் மக்கள் வாக்களித்து மோடி வகையறாவை வெளு வெளு என்று வெளுத்தார்கள்.அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டதுபோலவும் இந்திய மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் படுத்து காலை ஆட்டிக்கொண்டிருப்பது போலவும் கதையடிக்கிறார் மோடி. இதுவரை எத்தனை பேருக்கு சொந்த வீடு கிடைத்திருக்கிறது என்று கணக்கு சொல்லத் தயாரா?
இவரது ஆட்சியில் விவசாயிகள்வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டு, வீடு பேறு என்று புராணங்களில் சொல்லப்படும் மேலோகம் போய்ச் சேர்ந்ததுதான் நடந்திருக்கிறது.எதனை அடிப்படையாகக் கொண்டு எனது அரசை பணக்காரர்களுக்கு சாதகமானஅரசு என்று விமர்சிக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சியினரைப் பார்த்து கேட்கிறார் மோடி. பணக்காரர்களிடமிருந்து சொத்து வரியை வசூலிக்க முடியவில்லை என்று கூறி அந்த வரியையே இந்த பட்ஜெட்டில் ரத்து செய்துவிட்டார்களே அது யாருக்குச் சாதகமான நடவடிக்கை? கம்பெனிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் அளிக்கப்பட்ட வரிச்சலுகை கடந்த ஆண்டு 5 1/2லட்சம் கோடி நடப்பு நிதியாண்டில் 6 லட்சம்கோடி. இதில் ஒரு நயா பைசாவாவது கடைக்கோடி சாமானிய இந்தியன் கைக்கு வந்ததுண்டா?கிராமப்புற விவசாயத் தொழிலாளிக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்திற்கு 62 ஆயிரம் கோடி தேவை எனும் நிலையில் 34ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறதே மோடி அரசு. இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா? ஆனால் தனக்கு தேர்தல் செலவு செய்த இந்தியாவின் பெருமுதலாளியான அதானியை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று ஆஸ்திரேலிய முதலாளிகளே கட்டுப்படியாகாது என்று கைவிட்ட நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்த ஸ்டேட் பேங்கிலிருந்து ரூ.62ஆயிரம் கோடி கடன் தர ஏற்பாடு செய்த ஏழைப் பங்காளன்தான் திருவாளர் மோடி. அதானி என்ன அன்றாடம் 100 நாள் வேலைக்குப்போய் அந்த காசில் உலை வைக்கிற சாமானிய ஏழையா?நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்திருத்தம் கொண்டு வந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் நிலத்தைப் பறித்துபன்னாட்டுமுதலாளிகளுக்கு பந்தி வைத்திட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்மோடி. இதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடினாலும் முதலாளிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருக்கிறார் இந்த சாமானியர். மோடி தனது பேச்சில் வதந்திகளை பரப்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நாமும் அவருக்கு அதையே கூறுகிறோம். இது சாமானியர்களின் அரசு என்று வதந்தியை பரப்பாதீர்கள் திருவாளர் மோடி அவர்களே! ஆவேசமான உரை என்று நினைத்துக் கொண்டு அவர் பாடிய மோடி ராகம் அபஸ்வரமாக ஒலித்து, தாளம் சேராததப்புக் கச்சேரியாக முடிந்துவிட்டது என்பதுதான் உண்மை. - மதுக்கூர் இராமலிங்கம்

தோழர். R..அண்ணாதுரை MLA .30 லட்சம் நிதி உதவி . . .

மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துரூ.30லட்சம் செலவில் மதுரை மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றுவரும் கலையரங்க கட்டுமானப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை பார்வையிட்டார். உடன் பொதுப்பணித்துறை அதிகாரி பிரபாகரன் மற்றும் என்.ஜெயச்சந்திரன், .பிச்சைமணி, ஜா.நரசிம்மன் உள்ளிட்டோர்.  

பிப்ரவரி - 5, இன்று மாவீரர் ஸ்டாலின் நினைவு தினம்!


பாசிச அபாயத்திலிருந்து 

பூவுலகை காத்த 

செம்படைக்கு தலைமையேற்ற

வீரத் தளபதி ஸ்டாலின் . . .  


Wednesday, 4 March 2015

கார்ட்டூன் . . . கார்னர் . . .


மாநிலங்களவை மசோதாவை பறித்துச் செல்வதா?- யெச்சூரி .

மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை திடீரென்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்திருப்பது நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டதுதானா என்பதை இனிமேல்தான் ஆய்வு செய்ய வேண்டுமென மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார். இந்தப்பிரச்சனையில் முடிவெடுப்பதற்கு முன்பு நாடாளுமன்ற விதிகளையும் அரசியல் சாசன விதிகளையும் ஆராய வேண்டிய தேவை உள்ளது என அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மையை முற்றிலும் தவறாக அரசு பயன்படுத்துகிறது எனக்குற்றம் சாட்டினார்.
மாநிலங்களவையை எந்தவிதத்திலும் மதிக்காமல் அதன் மாண்புகளை சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது எனக்குறிப்பிட்ட அவர், “இன்சூரன்ஸ் மசோதா இன்னும் மாநிலங்களவையின் சொத்தாகவே இருக்கிறது; மாநிலங்களவையின் சொத்தாக இருக்கும் ஒரு பொருளை அரசு வலிந்து பறித்துச் சென்றிருக்கிறது; இது மாநிலங்களவையின் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பே ஆகும்என்று கடுமையாக விமர்சித்தார்.“மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்யும் பொருட்டு திரும்பப் பெற்றுக்கொள்வது தேவையில்லை என அரசு தற்போது கருதுகிறது;அப்படியானால், கடந்த வாரம் இந்த மசோதாவை திரும்பப் பெற்றுக்கொள்வதற்காக மாநிலங்களவையில் ஏன் ஒரு தீர்மானத்தை அரசு முன்மொழிந்தது?” என்றும் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார்.இதேபோன்ற கருத்தினை காங்கிரசின் ஆனந்த் சர்மா, சமாஜ்வாதிக் கட்சியின் நரேஷ் அகர்வால், திரிணாமுல் கட்சியின் தெரிக் பிரய்யன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். (பிடிஐ)                                                        

இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை விதிகளை மீறி மக்களவையில் அறிமுகம் செய்த மத்திய அரசைக் கண்டித்து செவ்வாயன்று நாடு முழுவதும் அனைத்து எல்ஐசி அலுவலகங்கள் முன்பும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் .சுவாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களவையில் மசோதாவை நிறைவேற்றினால், அதற்கடுத்த நாள் நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்த அவர், இதுதொடர்பாக மக்களிடம் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தார்..